மகள்

சரியாக ஒரு வாரமாகிறது.

Mixed Emotions என்பார்களே!! அப்படியாக தான் இந்த ஒரு வாரமாக சுற்றிக்கொண்டிருக்கிறேன்.

வெள்ளிக்கிழமை 11:26 AM
ரூபலா டாக்டரை பார்க்க உள்ளே சென்றிருக்கிறாள். அவளின் அம்மாவும் நானும் வெளியே இருந்த காத்திருப்போருக்கான இருக்கையில் அமர்ந்திருந்தோம். நான் மிகுந்த பதட்டத்துடன் இருந்தேன். நான் மூச்சுவிட சிரமப்பட்டு இதயம் ஒருவித அவஸ்தையை அனுபவித்து இருமல் வருகிறது. பயங்கரமான வரட்டு இருமல். நான் பயமாக இருக்கும் பொழுதெல்லாம் இந்த இருமல் வந்துவிடும். மிகச்சரியாக சொல்லவேண்டும் என்றால் சில சந்தர்பங்களில் ஏற்படும் முடிவுகளும் நிகழ்வுகளும் நமது வாழ்க்கையின் அடுத்த அடியை மாற்றிவிட கூடிய சக்தி படைத்தவை. அப்படியான முடிவுகளுக்கு காத்து நிற்கும் பொழுதெல்லாம் எனக்கு இந்த இருமல் வந்துவிடும். இதுவும் அப்படியான ஒரு நிகழ்வுக்கு காத்து நிற்கின்ற தருனம்.

11:40 AM
அவசரமாக வெளியே வந்த ரூபலா, அவள் அணிந்திருந்த செயின், கொடி, கம்மல், மெட்டி, வளையல்கள் அனைத்தையும் கழற்றி கொடுத்துவிட்டு திரும்பவும் உள்ளே சென்றாள்.

மதியம் 1:05 PM
ஜூனியர் டாக்டர் எங்களை அழைத்து வலி வருவதற்கான மருந்து கொடுக்க போவதாக சொன்னார். அதற்கான கையெழுத்தை ஒரு பேப்பரில் வாங்கிக்கொண்டனர். ரூபலாவை பார்க்கவில்லை. கேட்டதற்கு அவள் உள்ளே இருப்பதாக சொன்னார்கள்.
சாப்பிட வெளியே வந்தேன். மனதில் எதுவும் ஓடவில்லை. பக்கத்தில் இருப்பதாக தெரிவித்த நண்பர் ஒருவரை போனில் அழைத்துக்கொண்டு சாப்பிட சென்றேன். சாப்பிட்டு முடித்து வண்டியில் மருத்துவமனை அருகில் வந்த பொழுது ரூபலாவின் செல்போனிலிருந்து அழைப்பு. அவசரமாக எடுத்தேன்.
“எங்க இருக்கீங்க?”
“பக்கத்துலதான்”
“உள்ள வா”

3:00 PM

அடித்து பிடித்து உள்ளே சென்றேன். வாசலில் செக்யூரிட்டு அக்கா
“ஒரு 10 நிமிஷம் பேசிக்கோங்க” என சொல்லி என்னை அனுப்பினார்.
முன் அறையில் ஒரு மர நாற்காலியில் பச்சை அங்கியுடன் அமர்ந்திருந்தாள். எதோ பேசிக்கொண்டிருந்தோம். பேச பேச வலி அவள் முகத்தில் படர்வதை உணரமுடிந்தது. கைகள் அடிக்கடி நாற்காலியின் கைப்பிடியை இருக பற்றியது. திரும்பவும் அமைதியாகிறாள். பேசுகிறொம். மறுபடியும் அதே வலி முகத்தில். கைகள் நாற்காலியை பற்றுகிறது. எனக்கு தைரியம் சொல்லவெல்லாம் தெரியாது. தெரியவில்லை. குறைந்தபட்சம் அந்த நாற்காலியை பற்றியிருந்த கைகளையாவது பிடித்துக்கொள்ளலாம் என்றால் இந்த கொரோனா பயத்தால் நம்மால் யாருக்கும் வந்துவிட கூடாது என அதையும் செய்யவில்லை. அமைதியாக நின்றிருந்தேன். அவள் மெதுவாக எழுந்து அதனினும் மெதுவாக நடந்து உள்ளே சென்றாள்.

மாலை ஆறு மணிக்கு மேலானது. யாரும் எதுவும் சொல்லவில்லை. இருக்கைகளை மாற்றி மாற்றி அமர்ந்துகொண்டும் அடிக்கடி வாசலில் சினிமாவில் வருவது போல நடந்து கொண்டுமிருந்தேன்.

நான் இவற்றை எல்லாம் பதிவுசெய்வது மிக முக்கியம் என நினைக்கிறேன். இதை வைத்து அந்த நிகழ்வின் சூழ்னிலைகளும், வெளியே வெறுமனே நிற்கும் என்னுடைய மன பதட்டமும் எப்படி இருக்கும் என ஒரளவுக்கேனும் சொல்லிவிடுவதன் மூலம் உள்ளே இருக்கும் ரூபலாவின் வலியை கடத்திவிடலாம் என நினைக்கிறேன். இத்தனை இருக்கமான சூழ்நிலையில் தான் இச்சமூகத்தின் எந்த வித விவஸ்தையுமற்ற நம்பிக்கைசார்ந்த அழுத்தங்களையும் அனுபவித்தோம்.

கடந்த 7 மணி நேரமாக வலியுடனமும், குழப்பத்துடனம், பதட்டத்துடனும் காத்து நிற்கின்ற எங்களிடம்
“12 மணிக்கு அப்பறம் குழந்தை பிறந்தா பரவாயில்லை” என்றனர்.
“ஏன்?”
“வெள்ளிக்கிழமை பையன் பொறக்க கூடாதுனு சொல்லுவாங்க.”

இப்படி சொல்வது எப்படிப்பட்ட அழுத்தத்தை எங்களிடம் உருவாக்கும் என கொஞ்சம் கூட கவலையற்றவர்கள். அந்த தருனத்தில் அது தேவையற்றது. இருந்தும் அது தான் அனைவருக்கும் பிரதானமான கவலையாக உருவெடுத்தது. மூடநம்பிக்கைகள் பயத்தை மட்டுமே மனிதர்களிடம் அறுவடை செய்கிறது.

“அது எப்போ வெளிய வரனும்னு அது தானே முடிவு செய்யனும். நாம எப்படி சொல்ல முடியும்”

இரவு 10:00 மணி
டாக்டர் எங்களை அழைத்து இன்னும் வலி முழுவதுமாக வரவில்லை. விட்டு விட்டுதான் வருகிறது. அதனால் மறுபடியும் வலி வர வைக்கும் மருந்து கொடுக்க வேண்டும் என்றனர்.

மணி பதினொன்றானது
.
பன்னிரெண்டானது
.
ஒரு மணியை தாண்டியது
.
இரண்டு மணிக்கு யாரோ அலரும் சத்தம் கேட்க வெளியே ஓடி சென்று பார்த்தேன்.
யாரோ கதறி அழுது கொண்டும் கத்திக்கொண்டும் இருக்கும் சத்தம் கேட்டது. எனக்கு திரும்பவும் இருமல் வர ஆரம்பித்தது. பயம்.
செக்யூரிட்டி அக்கா அந்த கண்ணாடி கதவை திறந்துகொண்டு வந்து காத்திருப்போர் அறையில் இருந்த ஒருவரை அழைத்துச் சென்றார். திரும்பவும் அந்த கதவு திறக்கப்படும் பொழுது ஸ்ட்ரெக்சரில் ஒரு பெண் வலியில் கத்திக்கொண்டு வந்தார். கூடவே அந்த பெண்ணின் கணவன் வேகமாக நடந்து வந்து அவளுக்கு “தைரியமா இரு” என சொல்லிக் கொண்டிருந்தார். சிசேரியனுக்காக அழைத்துச்சென்றனர்.

மூணு மணியானது.
.
நான் இன்னும் அமராமல் வெளியே தான் நடந்துகொண்டிருந்தேன்.
.
மூணரைமணிக்கு அந்த செக்யூரிட்டு அக்கா வெளியே வந்து ஒருவரின் பெயரை சொல்லி அழைத்து “சீக்கிரம் வாங்க. பாப்பா வந்தாச்சி” என அத்தனை சந்தோஷமாக சொன்னார்.
கதவு திறந்திருந்ததால் அந்த வராந்தாவில் நர்ஸ் வைத்திருந்த குழந்தை எனக்கு தெரிந்தது. அத்தனை பச்சை குழந்தையை முதன்முதலில் பார்க்கின்ற பரவசமும், இன்னும் நம்மை கூப்பிடவில்லையே என்ற பயமும் இரண்டும் கலந்த எதோ ஒன்று நெஞ்சில் அடைத்தது. ஏனென்றால் இவர்கள் அனைவருக்கும் முன் நாங்கள் வந்திருந்தோம்.
கொஞ்ச நேரத்தில் அந்த சிசேரியனுக்கு சென்றவரும் வந்தார். பக்கத்தில் நடந்துவந்த நர்ஸின் கையில் சின்ன குழந்தை.
எனக்கு என்ன நடக்கிறதென்றே புரியவில்லை.

ஒரு மணி நேரத்திற்கு முன்பு இவ்வுலகை காணாது வெளியே இல்லாத சின்ன சின்ன உயிர்கள் திடிரென இப்படி கண்ணெல்லாம் உருட்டிக்கொண்டு கை கால்களை அசைத்துக்கொண்டு அழுகாமல் அமைதியாக பார்த்துக்கொண்டு செல்வது.
நான் சத்தியமாக குழந்தை பிறந்து அழுதுகொண்டே இருக்கும் என்றுதான் நினைத்திருந்தேன். சினிமா பார்த்து என நினைக்கிறேன். ஆனால் உண்மை வேறாகவும் இருக்கிறது. அது பிறந்தவுடன்தான் அழுகிறதே தவிற சில நிமிடங்களிலேயே சமத்தாக இவ்வுலகை ஆச்சரியமாக கவனிக்க ஆரம்பித்துவிடுகிறது.

நான்கு மணிக்கு டாக்டர் அழைக்கிறார் என செக்யூரிட்டி அக்கா அழைத்தார்.
எழுந்து ஓடினேன்.
இன்னும் வலி முழுவதும் வரவில்லை. காத்திருங்கள் என்றார்.
ரொம்ப கஷ்டமாக இருந்தது. ரூபலாவை பார்க்கவும் அனுமதிக்கவில்லை. எவ்வளவு நேரம் இப்படி வலியுடனே தனியாக இருப்பாள் என இருந்தது. நான் அந்த வராந்தாவில் நடந்து கொண்டே இருந்தேன். எப்பொழுதும் இப்படியான சந்தர்பங்களிலெல்லாம் எனது கைகள் தானாக செல்போனில் ரூபலாவின் நம்பருக்கு அழைக்க சென்றுவிடும். கடந்த பத்து வருடங்களாக அப்படி தான் இருந்திருக்கிறேன். இப்பொழுது சொல்வதற்கு யாருமில்லாமல் சுற்றிக்கொண்டிருந்தேன்.
காலையில் விடிந்தும் நாங்கள் அந்த அறையில் அமர்ந்திருந்தோம். யாரும் அழைக்கவேயில்லை.

காலை 9 மணி இருக்கும்.

அழைத்தனர். ஓடிச்சென்றேன்.
ரூபலா சக்கர நாற்காலியில் அமரவைக்கப்பட்டிருந்தாள். ஜூனியர் டாக்டர் பேசினார் “வலி வந்திடுச்சு. பிரசவ வார்டுக்கு கூட்டிட்டு போறோம். அதான் உங்ககிட்ட சொல்லிடலாம்னு கூப்பிட்டோம்” என்றார்.

அவள் முகத்தில் இன்னும் அதிக வலியை தாங்கிக்கொண்டு அமர்ந்திருந்தாள்.
அழுகவெல்லாம் இல்லை. ஆச்சரியமாக இருந்தது(இதுவும் சினிமா தாக்கம் தான்).

அவளிடம் ஏதாவது சொல்லவேண்டும்.
எனக்கு இப்படியான இடத்தில் என்ன சொல்வதென்ரெல்லாம் தெரியாது.

விடியற் காலையில் நான் பார்த்த அந்த பெண்ணின் கணவன் அவளிடம் “தைரியமா இரு” என சொன்னது ஞாபகம் வந்தது. இருந்தும் சொல்லவில்லை. ம்ம்.கும்.. இங்கு நானே தைரியமாக இல்லை.

அந்த ஒரு நிமிடமும் நான் எதுவுமே பேசாமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன். உண்மையை சொல்லவேண்டுமென்றால் என்ன சொல்லலாம் என யோசித்துக்கொண்டிருந்தேன்.

எங்கள் இருவரையும் அங்கு நின்றிருந்த நர்ஸ்கள் நான் என்ன சொல்ல போகிறேன் என உன்னிப்பாக பார்த்துக்கொண்டிருந்தனர்.

நான் சிரமப்பட்டு அவளிடம்
“Ok தானே?” என்றேன்.

பிரசவத்திற்கு போகும் பெண்ணிடம் இவ்வளவு கேவலமாக தைரியம் சொன்னவன் இந்த உலகத்திலேயே நானாகத்தான் இருப்பேன்.

என்னை பற்றி நன்றாக தெரிந்த ரூபலா
Ok தான் என தலையை ஆட்டினாள்.

என்ன செய்ய!!? நான் அப்போது வடிவேலு போல
“நீ ஒன்னும் கவலைப்படாதே… என்னை மட்டும் எப்படியவது காப்பாத்துப்பா” என்று குலுங்கி குலுங்கி அழுகும் நிலைமையில் தான் இருந்தேன்.

Jokes apart
உண்மையாகவே பயந்து தான் இருந்தேன். சும்மா நிக்குற உனக்கு என்னய்யா பயம்னு கேட்கலாம். எனக்கும் அது தான் தெரியவில்லை.

அடுத்து ஒரு மணி நேரம் நடையோ நடையென அந்த காரிடோரில் நடந்து கொண்டிருந்தேன்.
அதீதமாக சிந்திக்கும் பொழுதெல்லாம் இப்படி தான் நடந்து என்னை ஆசுவாசப் படுத்திக்கொள்வேன்.

10 மணிக்கு டாக்டர் அழைத்தார்.

பதின்மூன்றாவது முறையாக ஓடினேன்.
“நல்லா இருக்கா ப்பா. வலி இருக்கு
இன்னும் 4-5 மணி நேரத்தில் டெலிவரி ஆகிடும்” என்கிறார்.

நாலு மணி நேரமா!!! என யோசித்துக்கொண்டே நான் என் நடைபயணத்தை தற்காலிகமாக நிறுத்திக்கொண்டு நாற்காலியில் வந்தமர்ந்தேன்.

யப்பா!!! எவ்வளவு நீண்ட நிகழ்வு இது!!

முந்தின இரவு உணவும் இல்லை. தூக்கமும் இல்லை. நடையோ நடையென நடந்ததால் கால் வலித்து தலையெல்லாம் பாரமாக இருந்தது. ஒரு இறுக்கமான அமைதியுடன் உட்காந்திருந்தேன்.

10:45 AM

எனக்கு திரும்பவும் இருமல் வர ஆரம்பித்தது. இருமல் அதிகமாகி வாந்தி எடுப்பது போல தொண்டை கணைத்தது. உட்கார முடியவில்லை. எழுந்து திரும்பவும் நடந்தேன். திடீரென ஸ்திரேக்ச்சரில் பயங்கரமாக “வலிக்குது… அய்யோ.. ம்மா..” என அழுதுகொண்டே ஒரு பெண்ணை என்னை கடந்து கொண்டு சென்றனர். எனக்கு இன்னும் அதிகமாக தொண்டை அடைத்து ஓடி சென்று மறுபடியும் பழைய இடத்தில் அமர்ந்துகொண்டேன்

நாங்கள் மருத்துவமனைக்கு வந்து சரியாக இருபத்தினான்கு மணி நேரத்திற்கு பிறகு
11:02 க்கு செக்யூரிட்டி அக்கா வந்து “உள்ளே குட்டி பாப்பா சத்தம் கேட்குது. வெயிட் பண்ணுங்க அவங்களே சொல்லுவாங்க” என சந்தோஷமாக முன்கூட்டியே அறிவித்துவிட்டு சென்றார்.

அடுத்த இரண்டு நிமிடத்தில் அழைத்தனர். ஓடினோம்.

எடை பார்க்கும் மெஷினில் ஒரு குட்டி குழந்தை கண்களை உருட்டிக்கொண்டு கைகால்களை தூக்கி ஆட்டிக்கொண்டு படுத்திருந்தது.

டாக்டர் “பெண் குழந்தை பிறந்திருக்கு. பாத்துக்கோங்க” என சொன்னார்.

நான் அணிந்திருந்த மாஸ்க்கிற்குள் பயங்கரமாக சிரித்துக்கொண்டிருந்தேன்.

கொஞ்ச நேரத்தில் ரூபலாவை வெளியே அழைத்துக்கொண்டு வந்தனர். ஸ்ட்ரெக்ச்சரில் இருந்தாள். நான் சிரித்துக்கொண்டே சென்றேன்.

அவள் “என்ன?? நீ நெனச்ச மாதிரி பொண்ணு பொறந்துட்டா ன்னா??” என கேட்டாள்.

“ஆமா” என்று மறுபடியும் சிரித்தேன்.

எல்லாம் சுபம். ஆனால் இச்சமூகம் பெண் குழந்தை பிறந்த அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் இருந்து அதன் பெற்றோர்களுக்கு எந்த விதமான மன அழுத்தத்தை உருவாக்க துடிக்கிறார்கள் என்றும் அது பின்னாட்களில் அந்த பெண்ணை வளர்க்கும் பொழுது எப்படி பிரதிபலிக்கும் என அடுத்த இரண்டு நாட்களில் பார்த்துவிட்டேன். அதை தனியாக பேசலாம்.

சரி பாப்பாவுக்கு வருவோம். எனக்கு கோபத்தை தவிர வேறு எந்த உணர்வுகளையும் பெரிதாக காட்டிக்கொள்ள தெரியாது. பாப்பாவையும் அப்படித்தான் வெறுமனே பார்த்துக்கொண்டிருந்தேன்.

எல்லோரும் பேசினார்கள். எல்லோரையும் அது முழித்து முழித்து பார்த்தது. எனக்கு பேச தெரியாமல் பார்த்துக்கொண்டுதான் இருந்தேன்.

நான் ரூபலாவிடமே கேட்டேன்.

“நான் இப்படி பேசாம பார்த்துட்டு மட்டும் இருக்கனே!! என்னை அதுக்கு அடையாளம் தெரியாதா!?”

அடுத்த நாளும் அப்படி வெறுமனே பார்த்துக்கொண்டு தான் இருந்தேன்.

திடீரென ஒரு யோசனை.
அது வயிற்றில் இருக்கும் பொழுது எப்பொழுதெல்லாம் “தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ” பாட்டு போட்டால் உதைக்கும். சரி இப்பொழுது அதை போட்டு பாக்கலாம் என நினைத்தேன்.

அது சிணுங்கி அழுக ஆரம்பிக்கும் பொழுது அந்த பாட்டை போட்டோம். அப்படியே அழுகையை நிறுத்திக்கொண்டு பாட்டை கவனிக்க ஆரம்பித்துவிட்டது. அப்போ அப்போ கால்களையும் கைகளையும் தூக்கி தூக்கி கீழிறக்கியது. வயிற்றிலும் பாட்டு கேட்டு இதை தான் செய்து கொண்டிருந்திருக்க வேண்டும்.

அந்த அறை முழுவதும் இளையராஜா இசை நிறைந்திருக்க நாங்கள் எல்லாம் சுற்றி நின்று பார்த்துக்கொண்டிருக்க அவள் அமைதியாக அந்த ஒலி வருமிடத்தை நோக்கி கழுத்தை திருப்பி கேட்டுக்கொண்டிருந்தாள்.

யாருக்கும் தெரியாமல் என் கண்கள் கலங்கியது.
வயிற்றிற்குள் இருக்கும் உலகத்திற்கும் வெளியே இருக்கும் உலகத்திற்கும் இசையை வைத்து இணைக்க முடிந்த இளையராஜாவிற்காகவா அல்லது எனக்கு பிடித்த பாட்டு என் மகளுக்கும் பிடிக்கிறது என்ற அல்ப சந்தோஷமா என தெரியாது. ஆனால் கலங்கியது. உணர்வுகளை வெளியே காட்டத்தெரியாதவன் எப்பொழுதும் போல இந்த முறையும் அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன்.

வேறு பாடல்களை முயன்றோம். ஆனால் ஒவ்வொரு முறையும் ‘தென்றல் வந்து’ பாட்டை மட்டும் அப்படி கவனிக்கிறாள்.

இப்பொழுதும் அந்த பாட்டு தான் ஓடிக்கொண்டிருக்கிறது. நான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

பிரபுமித்ரன்

By:


Leave a comment

Design a site like this with WordPress.com
Get started